Friday, June 24, 2016

‎நுரையீரல்‬ ‪புற்றுநோய்‬

நுரையீரலில் ஏற்படும் புற்றுநோயை சுவாசப்பைப் புற்றுநோய் எனவும் அழைப்பர். எமது உடலில் நெஞ்சறையில் உள்ள வலது இடது நுரையீரல்கள் கூம்புருவில் அமைந்திருக்கின்றன. வலது நுரையீரல் மூன்று பாதிகளாக உள்ளன. இடது நுரையீரல் இரண்டு பகுதிகளாக உள்ளன. நாம் சுவாசிக்கும் பிராணவாயு, மூக்கு, தொண்டைப்பகுதி, வாதநாளி, சுவாசப்பைக்குழாய்கள் ஊடாகச் சுவாசச் சிற்றறைகளை அடைகின்றன. சுவாசச் சிற்றறைகளில் சுவாசப்பரிமாற்றம் ஏற்படுகின்றது.
இதன் மூலம் உடலில் இருந்து காபனீரொக்சைட் வெளியேற்றப்படுகின்றது. அவ்வேளையில் அவசியமான ஒட்சிசன் உள்ளெடுக்கபடுகிறது.
01. புற்றுநோயின் தோற்றம்
நுரையீரலில் காணப்படும் கலங்கள், பாதகமான புறக்காரணிகளால் தாக்கம் அடைகின்றன. செயற்திறனை காலப்போக்கில் இழப்பதனால், கட்டுப்பாடற்ற நிலையில் கலங்கள் பெருக்கம் அடைகின்றன. இதனால் தாய்க்கலங்களின் தோற்றம் செயற்பாடு முதலானவைகள் யாவும், மாறுபாட்டுடன் வளர்ச்சி பெரும் நிலைமையே சுவாசப் புற்றுநோயாக மாறுகிறது.
இதனால் புற்றுநோய்க் கலங்கள் வேகமாக வளர்ச்சி பெறுகின்றன. நுரையீரலின் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட முடியும். சுவாசப்பையின் செயற்பாடு படிப்படியாகக் குறைவடையும். சுவாசப்பையில் இருந்து ஏனைய இழையங்களுக்கு ஊடுருவும் நிலை ஏற்படும். நாம் கவலையீனர்களாக இருப்போமாகில் எலும்பு, மூளை, ஈரல், முதலான ஏனைய உறுப்புக்களும் பாதிப்படையும். இந்நிலைமை ஏற்படுமாகில், சிகிச்சையின் போது ஏற்படும் துன்பியலை வரையறுக்க முடியாது. அத்தோடு நோயின் கோரப்பிடியில் இருந்து மீள முடியாது என்பதும் உண்மையேயாகும். ஒருவரின் சிகிச்சை வெற்றியளிப்பதற்கு நோய் நிலை ஆரம்பக்கட்டத்தில் அமைய வேண்டும்.
02. சுவாசப்பைப் புற்றுநோய்க்கான காரணிகள்.
1. புகையிலையின் பாவனை:-
சிகரெட், பீடி, சுருட்டு, முதலானவைகள் புகைத்தல் காரணமாக 85% வரையிலான நுரையீரல் புற்றுநோய் சம்பவிப்பதாகப் புள்ளிவிபரங்கள் காட்டி நிற்கின்றன. மேலும், இவ்விதம் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுடன் நெருக்கமாகச் சீவிப்பவர்களும் இவ்வாபத்திற்கு இலக்காகமுடியும். சிகரெட் புகையிலை ஏறத்தாள 4000ற்கு மேற்பட்ட இரசாயனங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் முன்னூறு வரையான இரசாயனங்கள், புற்றுநோயின் தோற்றத்துக்கு கைகொடுப்பதாக அமைகிறது.
புகைப்பதால் ஏற்படும் ஆபத்து சுவாசக்குழாயின் சிற்றறை வரை (Alveoli) பாதிப்பதாக அமைகிறது. மேலும் இக்காரணத்தினால் நிக்கொற்றின் இரத்தக் குழாய்களைச் சுருக்கம் அடையச் செய்வதாகவும் அமைந்து விடுகிறது.
2. மாசடைந்த காற்று
நகர வாழ்க்கை - வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, சீமெந்து தொழிற்சாலை, கல்லுடைக்கும் தொழிற்சாலை, நெசவு உற்பத்தி தொழிற்சாலை முதலானவற்றில் வேலை செய்பவர்களும் இத்தாக்கத்திற்கு இலக்காக முடியும் .
3. ஏனைய நுரையீரல் நோய்கள்
வாழ்க்கை பூராகவும் தொடர்கின்ற ஆஸ்மா நோய் தீவிரம் அடையும் நிலை ஏற்படுமாயின் சுவாசப்பையையும் அத்துடன் தொடர்பான ஏனைய உறுப்புக்களையும் வெகுவாகப் பாதிப்படையச் செய்கிறது. இவ்விதமான உடல் நலம் குன்றியவர்களில் நோய்த்தொற்று மீண்டும் மீண்டும் சம்பவிப்பதாகலாம். இதனால் அவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவர். இதனால் நுரையீரலில் ஏற்படும் இழையக்கட்டமைப்பு புற்று நோய் ஏற்பட துணை போவதாகலாம்.
‪#‎Case‬ ‪#‎Study‬:
திரு. சிவகுரு - 59 வயது தீவிர முயற்சியாளர். சிறுவயதினில் இருந்து காலத்திற்கு காலம் ஆஸ்மா நோய்க்கு இலக்காவார். வைத்திய ஆலோசனையைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருவார். இந்நிலையில் அவரின் எடை படிப்படியாகக் குறையலாயிற்று. இருமல், நெஞ்சுவலி முதலானவைகளையும் உணரலானார். சுவாசிக்கக் கஷ்டப்படுவார். இலகுவாகக் களைப்படையும் நிலைமை மேலோங்கிற்று. தனியார் வைத்தியமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறலானார். இவரின் தீவிரமான நோய் நிலைமையை அவதானித்த வைத்தியர்கள் C.T. ஸ்கேன், கணணி ஸ்கேன் முதலானவைகளைச் செய்து பார்த்தனர். சுற்றுவெளிப்பகுதியில் உள்ள கட்டியில் ஊசி மூலமாக இளைய மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர்.
அவ்வேளையில் இவரின் இடது நுரையீரல் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தினர். இருந்தபோதும் நோயை இனம்கண்ட ஆறு கிழைமை இடைவெளியிலேயே மரணத்தை தழுவிக் கொண்டார்.
 நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது:
1. ஆஸ்மாவின் சிகிச்சையை தொடர்ந்த வேளையில், புற்றுநோய்க்கு இலக்காவோம் என்பதைக் கிஞ்சித்தும், யாரும் எதிர்பார்க்கவில்லை.
2. முதுகு உளைவு, என்பு நோ, தொடர்ச்சியான தலையிடி முதலான அறிகுறிகள் தென்படின், இவை புற்றுநோய் தொடர்பான அறிகுறி என்பதை நோயாளியும், அவர் குடும்பத்தினரும் அறிந்திலர்.
3. நோய் தீவிரமான நிலையிலும் அதனைப் பாரதூரமாகக் கருதவில்லை. இதனால் இனங்கண்ட குறுகிய கால இடைவெளியில் மரணம் சம்பவித்து விட்டது.
 எனவே 50 வயதிற்கு மேற்பட்டவர், குறிப்பாகச் சுவாசத் தொகுதியில் வேறு நோய்களுக்குச் சிகிச்சை பெறுபவர்கள் புற்றுநோய்க்கான - இனம்காணும் முயற்ச்சியில் ஈடுபடல் முதற்பணியாக அமைய வேண்டும்.
 ஆரம்ப நிலையில் இனம்காணின் இலகுவில் நிலையைக் கட்டுப்படுத்தலாம்.
4. அஸ்பெஸ்ரஸ் பாவனை
இத்தூசியைச் சுவாசிப்பதனால் நுரையீரலில் உள்ள கலங்கள் உறுத்தப்படும் நிலைமை மேலெழுதல் சாத்தியமாகும். இதனால் அவைகள் தமது செயற்திறனை இழப்பதோடு அசாதாரண வளர்ச்சிக்கு வழிகோலுவதாக அமையமுடியும். குறிப்பாக:-
- தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள்.
- தொழிற்சாலைக்கு அண்மையில் சீவிப்பவர்கள்.
- கப்பல் கட்டுதல், வீட்டுக்கூரை போடுதல் முதலான வேலைகளில் ஈடுபடுபவர் இலகுவில் இலக்காவர்.
- இவற்றுக்கு மை பூசுபவர் முதலானோர் பாதிப்படைய முடியும்.
5. பரம்பரை காரணமாகவும் பாதிப்புக்கள் ஏற்படமுடியும்.
குழந்தைகள் மத்தியில் இந்நோயின் தோற்றத்திற்கு அவர்கள் குடும்பத்தில் முன் இந்நோய் இருக்குமாயின், இப்பாதிப்பு ஏற்பட வாய்ப்பாகலாம். அதேபோல பெண்களும் இளம் வயதினில் பாதிப்பு அடைய முடியும். ஆரம்ப நிலையில் இனம்காணத் தவறின் இந்நோயில் இருந்து இலகுவில் விடுபடமுடியாது.
03. இந்நோயின் குணங்குறிகள்
அ. இரு கிழமைகளுக்கு மேற்பட்ட இருமல்.
ஆ. நெஞ்சில் வலி - சுற்றுப்புறத்தில் விலா எலும்புகள் பாதிப்பு அடைவதனால் நெஞ்சில் நோ ஏற்படல்.
இ. சளியுடன் இரத்தம் வெளியேறுதல்.
ஈ. சுவாசக்குழாயை - புற்றுநோய்க் கட்டி அழுத்துவதனால் அடைதல், சுவாசிப்பதில் நெருக்கீடு,கஷ்டம், கழுத்து நாளங்கள் புடைப்படைதல் சம்பவிக்க முடியும்.
உ. கைநோ, கை பலவீனம் மேலோங்குதல்- கைகளுக்குச் செல்லும் நரம்புகள் அழுத்தப்படுவதனால் இந்நிலைமை ஏற்படுவதாகலாம்.
ஊ. இலகுவில் களைப்பு அடைந்து விடுவர்.
எ. எச்சிலை விழுங்குவதற்கே கஷ்டப்படுவார்.
ஏ. உடல் எடை படிப்படியாகக் குறைவடையும்.
ஐ. உண்பதற்கு விருப்பம் இன்றித் தவிப்பர்.
ஒ. ஏக்க சுபாவம் மேலிட்டுக் காணப்படுவர்.
04. நோய் தீவிரமடையின் - குணங்குறிகள்.
அ. உடல் மெலிவடையும்.
ஆ. பசியின்மை மேலோங்குதல்.
இ. களைப்பு மெலிட்டவராவர்.
ஈ. எலும்பில் நோ மெலிட்டவராவர். முதுகில் நோ ஏற்படல்.
எலும்பு இலகுவில் முறிவடைய ஏதுவாகலாம். (குறிப்பாகத் தொடை எலும்பு)
உ. சுவாசப்பையில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு நோய் பரவுமாகின் கை, கால்கள் பலவீனம் அடையலாம். செயலிழத்தல் சம்பவிப்பதாகவும் அமைய முடியும்.
ஊ. நோயாளியின் உணர்வின்றி மலசலம் வெளியேறுதல்.
எ. மூளை பாதிப்பு ஏற்படுமாயின் தலையிடி மேலோங்கும்.
ஏ. வாந்தியெடுப்பர்; வலிப்புச் சம்பவிப்பதாகவும் அமையலாம்.
ஐ. சுயநினைவின்றி பேதைமை மேலிட்டவராகக் காணப்படுவர்.
குறிப்பு:
1. ஆரம்ப அறிகுறிகள் யாவை என்பதையிட்டு நாம் அனைவரும் கவனம் கொள்ள வேண்டும்.
2. கூடுதலாக நோயாளர்கள், இயலாமை எனும் நிலைமை மேலெழும் நிலையிலேயே இந்நோயையிட்டுச் சிந்திப்பதுண்டு.
3. வைத்திய ஆலோசனை பெறச் சென்றவேளையிலும், வைத்தியர்களும் இந்நோய் தொடர்பாகக் கவனம் எடுப்பதும் குறைவேயாகும்.
4. நோயை நிச்சயப்படுத்துவதற்கான பரிசோதனைகள் - 50 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஈடுபடின் 90% மேற்பட்ட மரணங்களைத் தடுக்க முடியும்.
5. இயற்கைக்கு மாறாக நுரையீரலில் உருவாகும் ஆபத்தான கட்டிகளே (கலங்கள்) நுரையீரல் புற்றுநோய் - நுரையீரலில் உருவாகும் கட்டிகள் உடலில் ஏனைய பாகங்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
05. நுரையீரல் புற்றுநோயை இனம் காணும் வழிமுறைகள்:
நோயின் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு இப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
அ. நெஞ்சுப்பகுதியை 'X'Ray கதிரினூடாகப் படம் எடுத்துப் பார்த்தல். இதன் மூலம் இயற்கைக்கு மாறாக ஏதாவது பாதிப்புக்கள் / பிரச்சனைகள் உள்ளதா என்பதை அறியமுடியும்.
ஆ. C.T.Scan-Xray கதிரில் கண்டுகொள்ளப்பட்ட பிரச்சனையை கணினி முறையில் துல்லியமாக உறுதிப்படுத்தக்கூடிய பரிசோதனையாகும்.
இ. Biopsy- மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது இனம்காணப்பட்ட நோயினை உயிரியல் முறையில் உறுதிப்படுத்தும் பரிசோதனையாகும்.
ஈ. Sputum Cytology - நுணுக்குக் காட்டியின் கீழ் பெறப்பட்ட கலமாதிரியை பரிசோதனை செய்யும் முறையாகும்.
06. புற்றுநோய்க்கான சிகிச்சை
நுரையீரல் புற்றுநோய்க்கான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே சிகிச்சை அழிக்கப்படுகின்றது. நோயாளியின் இதயத்துடிப்பு, பொதுவான ஆரோக்கிய நிலைமை, புற்றுநோய்க் கட்டியின் நிலை முதலான அனைத்தையும் கொண்டே சிகிச்சை முன்னெடுக்கப்படும்.
அ. சத்திர சிகிச்சை:-
அறுவை சிகிச்சையின் ஊடாகப் புற்றுநோய் கட்டிகளை அகற்றுதல்; இதேவேளை புற்றுநோய் கட்டி சிறிதாகவோ அல்லது உடலின் ஏனைய பகுதிக்கோ அல்லது குறிப்பிட்ட அங்கத்திற்கு புற்றுநோய் கட்டி பரவலாகப் பரவாது இருந்தால் மட்டுமே, அறுவைச்சிகிச்சையின் ஊடாக புற்றுநோய்க்கட்டிகளை அகற்ற முடியும். சிகிச்சை நுரையீரல் புற்றுநோய்க்கான காரணிகளை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையமுடியும்.
ஆ. Chemotherapy - புற்றுநோய்க்கலத்திற்கு எதிரான மருந்துகளை வழங்கி அக்கலங்களை அழித்தல்.
இ. Radiation Theraphy - உயர் சக்தி கொண்ட கதிர்களின் உதவியுடன் புற்றுநோய் கலங்களைப் பாதிக்கச் செய்து அக்கலங்களை பலம் இழக்கச் செய்து அழித்தல்.
ஈ. Endobronchial Theraphy - மேலே குறிப்பிட்ட சிகிச்சை முறைகளில் ஒன்றான இம்முயற்சியில், சுவாசக்குழாய்களினூடாக சிகிச்சை அளிக்கப் படுகிறது. இச்சிகிச்சை முறை புற்றுநோயின் ஆரம்பநிலைமையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.
07. சுவாசப் புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:
அ. புகைத்தலை முற்றாகத் தவிர்ப்போம். புகைப்பவர் மாத்திரமல்ல அருகிலிருப்பவர்களுக்கும் அதனால் ஆபத்து உண்டு.
ஆ. கட்டிட வேலைகளில் ஈடுபடுபவர், அஸ்பெஸ்ரஸ் தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர், தூர இடங்களுக்கு வாகனங்களில் பிரயாணம் செய்பவர்கள், முதலானோர் தமது முயற்சிகளின் போது பாதுகாப்புக் கவசம் பாவித்து தூசி சுவாசிப்பதைத் தவிர்த்தல் அவசியமாகும்.

No comments:

Post a Comment

How to make your app responsive according to screen size in Flutter

Step 1 : You can use below code to take your screen width & height      double  width =  MediaQuery . of (context).size.width;      doub...